Tuesday 10 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (11-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (11-12-2013) காலை,IST- 08.30 மணி,நிலவரப்படி,

தே.மு.தி.க.வில் இருந்து திடீர் விலகல் பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலுக்கு முழுக்கு எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா; சபாநாயகர் ஏற்றார்




சென்னை, டிசம்பர், 11-12-2013
தமிழகத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர், பண்ருட்டி ராமச்சந்திரன். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் ஆட்சியில், இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சராக பணியாற்றியவர்.
தே.மு.தி.க. அவை தலைவர்
விஜயகாந்த், தே.மு.க.தி.க.வை தொடங்கியது முதல் அந்த கட்சியில் இணைந்து அதன் வளர்ச்சிக்கு பெரும் அளவில் உதவினார். இதனால் பண்ருட்டி ராமச்சந்திரன் தே.மு.தி.க.வின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
2011-ம் ஆண்டில் தே.மு.தி.க. கட்சியின் சார்பில் ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி அவருக்கு கிடைத்தது.
அதிருப்தி அடைந்தார்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தே.மு.தி.க. உட்கட்சி விவகாரங்களால் சற்று அதிருப்தி அடைந்திருந்தார். சமீபத்தில் தமிழக சட்டசபையில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்தபோது, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், ஆளும் கட்சிக்கு எதிராக கொதித்தெழுந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆனால் பண்ருட்டி ராமச்சந்திரன் வெளிநடப்பு செய்யாமல் அவரது இருக்கையில் அமர்ந்திருந்தார்.
விஜயகாந்த்துக்கு கடிதம்
இந்த நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் நேற்று தே.மு.தி.க.வில் இருந்து திடீரென விலகினார். அவைத்தலைவர் உள்ளிட்ட கட்சி பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்த அவர், கட்சித்தலைவர் விஜயகாந்த்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அந்த கடிதத்தில், 'வயது மூப்பு காரணமாக தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன். கட்சி பொறுப்புகளில் இருந்தும் விலகிக்கொள்கிறேன். கடந்த ஆண்டுகளில் தாங்கள் என் மீது கொண்டிருந்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறி இருக்கிறார்.
சபாநாயகருடன் சந்திப்பு
பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்து, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதை சபாநாயகர் தனபால் பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர் அறைக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் வந்து செய்திக்குறிப்பு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உடல்நிலை சரியில்லை
உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். ஆகவே, தே.மு.தி.க.வின் கட்சி பொறுப்புகளில் இருந்தும், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் இன்று முதல் (டிசம்பர் 10-ந்தேதி) விலகிக்கொள்கிறேன்.
தாயினும் மேலான அன்பு காட்டி, என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட, ஆலந்தூர் தொகுதி மக்களின் காலத்தே செய்த இந்த உதவியை எனது வாழ்நாள் முழுவதும் நெஞ்சில் நீங்காது நிலை நிறுத்துவதோடு, அவர்களுக்கு எனது இதயமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராஜினாமா ஏற்பு
எம்.எல்.ஏ. பதவியை பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா செய்தது குறித்து நிருபர்களுக்கு சபாநாயகர் தனபால் அளித்த பேட்டி வருமாறு:- பண்ருட்டி ராமச்சந்திரன் என்னிடம் நேரில் வந்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அது சட்டசபை விதிகளின்படி இருந்தது. இதனால் திருப்தி அடைந்து, அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளேன்.
தற்போது தமிழக சட்டசபையில் உள்ள 235 எம்.எல்.ஏ.க்கள் (நியமன உறுப்பினர் சேர்த்து) எண்ணிக்கையில் ஒன்று குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசியலில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் ஓய்வு பெற்றிருப்பது தமிழக அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
அரசியல் பிரவேசம்
பண்ருட்டி ராமச்சந்திரன் 10.11.1937 அன்று பிறந்தார். கடலூர் மாவட்டம், புலியூர் அவரது சொந்த ஊராகும். பி.இ. (ஹானர்ஸ்) பட்டம் பெற்றுள்ள அவர், ஆரம்பத்தில் தமிழக அரசு அதிகாரியாக பணியாற்றினார்.
1967ம் ஆண்டு பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலில் குதித்தார். 1971-76ம் ஆண்டுகளில் தி.மு.க. அமைச்சராக பணியாற்றிய அவர், 1977ம் ஆண்டில் எம்.பி. தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இணைந்தார். இரு கட்சி ஆட்சியிலும் அமைச்சராக பதவி வகித்தவர், பண்ருட்டி ராமச்சந்திரன்.
பண்ருட்டி ராமச்சந்திரன் கடந்த 1991-96ம் ஆண்டுகளில் பா.ம.க. கட்சியில் இருந்தார். 1991ம் ஆண்டு பா.ம.க.வின் முதல் எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் நுழைந்தது பண்ருட்டி ராமச்சந்திரன்தான். பா.ம.க.வின் தேர்தல் சின்னமான யானை மீது ஏறி அவர் சட்டசபைக்கு வந்தார்.
பின்னர் பா.ம.க.வில் இருந்து விலகி மக்கள் நல உரிமை கழகம் என்ற அரசியல் சார்பற்ற இயக்கத்தை நடத்தினார். அ.தி.மு.க. மற்றும் பா.ம.க.வுக்கு எதிராக போட்டி கட்சிகளையும் நடத்தியவர், பண்ருட்டி ராமச்சந்திரன். 1983ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
அண்ணா பேசுகிறார் என்ற புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு அவர் சென்று வந்துள்ளார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

                                                                                            மேலும்........

No comments:

Post a Comment