Wednesday 11 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (12-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (12-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,


19–ந் தேதி முதல் வழங்கப்படுகிறது 40 பாராளுமன்ற தொகுதிக்கும் அ.தி.மு.க. விருப்ப மனு ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, டிசம்பர், 12-12-2013,
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் 19–ந் தேதி முதல் விருப்பமனுக்களை கொடுக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு தயார்
‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்ற வாசகத்திற்கேற்ப 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, பாராளுமன்ற தேர்தல் காய்ச்சல் இப்போதே அரசியல் கட்சிகளை தொற்றிக்கொண்டு உள்ளது. தேர்தலுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றன.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சியின் அபார வளர்ச்சியும், காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த பின்னடைவும் அரசியல் பார்வையாளர்களையும், அரசியல் கட்சியினரையும் சற்றே யோசிக்கவே வைத்திருக்கிறது. மாநில கட்சிகளை பொறுத்தவரையில் பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளை பிரதானப்படுத்தியே பிரசாரத்தை முன் எடுத்துச்செல்லும். ஏனென்றால் நடப்பது பிரதமர் யார்? என்பதை தீர்மானிக்கும் தேர்தல்.
40 தொகுதிகளிலும் வெற்றி இலக்கு
தமிழகத்தை பொறுத்தவரையில் பிரதான கட்சியான அ.தி.மு.க. தமிழகத்தில் உள்ள 39 இடங்களிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு இடத்திலும் வெற்றி பெற்று தேசிய அரசியலில் செல்வாக்கை செலுத்த விரும்புகிறது. அதற்கேற்றாற்போல் அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா தொண்டர்களை சந்திக்கும் போது எல்லாம் இதையே வலியுறுத்தி வருகிறார்.
ஏற்காடு தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றி கொண்டாட்டத்தின் போது தொண்டர்களிடம் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு பேசிய முதல்–அமைச்சர், ஏற்காடு தேர்தலை போலவே தொண்டர்கள் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற உழைக்க உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
மற்ற கட்சிகள்
தி.மு.க.வை பொறுத்தவரையில் தேர்தல் பற்றி முடிவு செய்ய 15–ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொதுக்குழுவை கூட்டியிருக்கிறது.
பா.ம.க. ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி விட்டாலும், பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேரலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. ம.தி.மு.க.வும் இதே மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
பாரதீய ஜனதாவை பொறுத்தவரையில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று ஏற்கனவே அறிவித்து விட்டது.
ஜெயலலிதா அறிவிப்பு
இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயார் என்று அ.தி.மு.க. அறிவித்து, களத்தில் இறங்கியுள்ளது. அதற்கேற்றாற்போல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் விருப்பமனுக்களை 19–ந் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்றவர்கள் தலைமை கழகத்தில் வருகிற 19–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை உரிய கட்டண தொகையை செலுத்தி அதற்கான விண்ணப்பப்படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.

                                                                                             மேலும், ....

No comments:

Post a Comment