Monday 5 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (06-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (06-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

சொத்து குவிப்பு வழக்கு ஜெயலலிதா அப்பீல் மனு விசாரணை தொடங்கியது வழக்கை ஒத்திவைக்க நீதிபதி மறுப்பு

பெங்களூரு, 06-01-2015,
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று தொடங்கியது. வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு விடுத்த கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார்.
சொத்துகுவிப்பு வழக்கு
பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்துகுவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் கடந்த அக்டோபர் 17-ந் தேதி இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்தது.
மேலும் ஜெயலலிதாவுக்கு 4 மாதம் ஜாமீன் நீடிப்பு செய்து டிசம்பர் மாதம் 18-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கும்படியும், அதற்காக தனி நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கர்நாடக ஐகோர்ட்டுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
விசாரணை தொடங்கியது
இதையடுத்து, ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி நியமனம் செய்யப்பட்டார்.
                                                                                                                              மேலும், . . . .

போடி அருகே, ரூ.1,500 கோடி செலவில் ‘நியூட்ரினோ’ ஆராய்ச்சிக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

புதுடெல்லி, 06-01-2015,
போடி அருகே ரூ.1,500 கோடி செலவில் ‘நியூட்ரினோ’ ஆராய்ச்சி கூடம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளது.
நியூட்ரினோ என்றால் என்ன?
நியூட்ரினோ என்பது மிகக்குறைந்த வினைபுரியும் ஆற்றல் வகையை சேர்ந்த அடிப்படை துகள்களுள் ஒன்று ஆகும்.
நியூட்ரினோக்கள் பிரபஞ்சத்தின் எல்லா மூலை முடுக்குகளில் இருந்தும் உருவாகி அனைத்து திசைகளிலும் பயணித்துக் கொண்டு இருக்கின்றன. நம் உடலில் கூட, தன்னிடமுள்ள பொட்டாசியம் தாதுவை பயன்படுத்தி ஒரு நொடிக்கு பல லட்சம் நியூட்ரினோக்கள் உற்பத்தி செய்து, அனைத்து திசைகளிலும் செலுத்தப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பிரபஞ்சத்தின் வரலாறு
பிரபஞ்சத்தின் அனைத்து மூலை முடுக்குகளிலும் இந்த நியூட்ரினோக்கள் சென்று திரும்புவதால் இதனை ஆராய்வதன் மூலம் பிரபஞ்சத்தின் தோற்ற வரலாற்றை அறிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமி அதிர்ச்சி, எரிமலை உருவாதல், சுனாமி போன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.
                                                                                                                       மேலும், . . . .

குஜராத் கடல் பகுதியில் படகில் வந்தவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் ராணுவ மந்திரி பாரிக்கர் திட்டவட்டம்

புதுடெல்லி, 06-01-2015,
குஜராத் கடல் பகுதியில் படகில் வந்தவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் என்று ராணுவ மந்திரி பாரிக்கர் திட்டவட்டமாக கூறினார்.
படகில் வந்த தீவிரவாதிகள்
கடந்த மாதம் 31–ந் தேதி நள்ளிரவு குஜராத் மாநிலம் போர்பந்தர் நகரில் இருந்து 365 கி.மீ. தொலைவில் அரேபிய கடலில், இந்திய கடல் எல்லை பகுதிக்குள் நுழைந்த ஒரு மர்ம படகை கடலோர காவல் படையினர் கண்டுபிடித்து துரத்திச் சென்றனர்.
அந்த படகில் வந்த தீவிரவாதிகள் கடலோர காவல் படையினரிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக படகை வெடி வைத்து தகர்த்தனர். இதில் அந்த படகில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனர்.
2008–ம் ஆண்டு நவம்பர் மாதம் 26–ந் தேதி மும்பைக்குள் கடல் மார்க்கமாக படகில் நுழைந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை இது நினைவூட்டுவதாக இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் சந்தேகம்
எனினும், படகில் வந்தவர்கள் தீவிரவாதிகள் அல்ல, அவர்கள் போதை மருந்து கடத்தல் கும்பலாக இருக்கலாம் அல்லது பாகிஸ்தான் மீனவர்களாக இருக்கலாம் என்ற பரவலான கருத்து எழுந்தது. காங்கிரஸ் கட்சியும் இதுபோன்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
இந்த சம்பவம், தீவிரவாத தாக்குதல் முயற்சி என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும் அக்கட்சி குற்றம்சாட்டி இருக்கிறது.
                                                                                                            மேலும், . . . . 

பிறந்தநாள் கொண்டாடிய கனிமொழிக்கு கருணாநிதி-மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து


சென்னை, 06-01-2015,
கனிமொழி எம்.பி. நேற்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
47-வது பிறந்தநாள்
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. கலை, இலக்கிய-பகுத்தறிவு பேரவை தலைவரும், எம்.பி.யுமான கவிஞர் கனிமொழி நேற்று தனது 47-வது பிறந்தநாளை சென்னை ஆழ்வார்ப்பேட்டை சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி காலை 10.30 மணியளவில் கனிமொழி இல்லத்துக்கு வந்தார். பூங்கொத்து வழங்கி கனிமொழியை வாழ்த்தினார். அப்போது கனிமொழி பிறந்தநாள் ‘கேக்’ வெட்டி முதலில் கருணாநிதிக்கும், பின்னர் தனது தாயார் ராஜாத்தி அம்மாளுக்கும், கணவர் அரவிந்தனுக்கும் ஊட்டினார். இதையடுத்து அவர்கள் அனைவரும் கனிமொழிக்கு அடுத்தடுத்து கேக்கை ஊட்டினார்கள்.
இந்த நிலையில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கனிமொழி இல்லத்துக்கு வந்தார். பொன்னாடை போர்த்தி கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
                                                                                                             மேலும், . . . . 

No comments:

Post a Comment