Thursday 5 June 2014

புலனாய்வு ரிப்போர்ட் (05-06-2014)

புலனாய்வு ரிப்போர்ட் (05-06-2014) மாலை, IST- 06.30 மணி,நிலவரப்படி,

மே.வ.கும்பலிடம் கள்ள நோட்டு தொழிலை கற்றுக்கொண்டேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்

சென்னை, ஜூன். 5–
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக கள்ள நோட்டுகளை கடத்தி வந்து சென்னையில் புழக்கத்தில் விட முயன்ற ரபீக், சாகுல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் தலைமையில் டி.எஸ்.பி. ரத்தினமணி, இன்ஸ்பெக்டர் லிட்சன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் மேற்கொண்ட ரகசிய கண்காணிப்பு காரணமாக கள்ள நோட்டு கும்பல் பிடிபட்டுள்ளது.
இவர்களில் ரபீக், கள்ள நோட்டு கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. வியாசர்பாடியைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பேங்க் கலெக்ஷன் ஏஜெண்டாக இருந்தார்.
2010–ல் போலி ஏ.டி.எம். கார்டு பயன்படுத்தியதாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறைக்கு சென்றார். 2013–ல் சோழபுரம் விமல்பிரபு கொலை வழக்கில் கைதாகி சிறை சென்றார்.
அதே ஆண்டு கொடுங்கையூர் கள்ள நோட்டு வழக்கில் மீண்டும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏழுகிணறு கொலை முயற்சி வழக்கிலும் சிறை சென்றார். பின்னர் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கொலை வழக்கு உள்ளிட்ட 9 வழக்குகள் ரபீக் மீது உள்ளது. சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இவர் கடந்த மார்ச் மாதம் 28–ந்தேதி சிறையில் இருந்து வெளிவந்துள்ளார்.
கொடுங்கையூரில் சூதாட்ட விடுதி ஒன்றில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றபோது பிடிபட்ட ரபீக், மத்திய குற்றப்பிரிவு போலீசாராலும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சிறையில் இருந்து வெளி வந்த பின்னர் கடந்த 3 மாதங்களாக கள்ள நோட்டுகளை கடத்தி வருவதற்கு ரபீக் திட்டம் தீட்டி செயல்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரபீக்கின் கூட்டாளியான சாகுல் ஏற்கனவே 2 முறை மேற்கு வங்காளத்தில் இருந்து கள்ள நோட்டுகளை கடத்தி வந்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அப்போது மிகவும் துணிச்சலாக விமானத்திலேயே சாகுல் கள்ள நோட்டுகளை கடத்தி வந்து சென்னைக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்துள்ளார். கள்ள நோட்டுகளை கடத்தி வருவதன் மூலம் இவர்களுக்கு 50 சதவீதம் அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது.
ரபீக்குக்காக, கொல்கத்தாவில் இருந்து நாட்டு துப்பாக்கி ஒன்றையும், 5 தோட்டாக்களையும் சாகுல் வாங்கி வந்துள்ளார். இவைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் 2 முறை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது தான் ரபீக்குக்கு மேற்கு வங்காள கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரபீக் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:–
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த தாரிக், லால் சர்புதீன் ஆகிய இருவரும் கள்ள நோட்டுகள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர்.
அப்போது அவர்களுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர்கள்தான் கள்ள நோட்டுகளை மேற்கு வங்காளத்தில் இருந்து கடத்தி வந்து சென்னையில் புழக் கத்தில் விட்டால் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர்.
போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால், அங்கிருந்து கள்ள நோட்டுகளை கடத்தி வருவது கஷ்டமான காரியம் என்று அவர்கள் கூறினர். முடிந்தால் நீங்களே போய் வாங்கி வந்து புழக்கத்தில் விடுங்கள் என்று கூறினர்.
இதைத் தொடர்ந்து யாரிடம் போய் கள்ள நோட்டுகளை வாங்குவது என்பதை தெரிந்து கொண்டேன். பின்னர் அதனை எப்படி கடத்தி வருவது என்பது பற்றியும் கற்றுக் கொண்டேன்.
இதன் பின்னர் கடத்தல் தொழிலில் நானும் சாகுலும் நேரடியாக ஈடுபட்டோம். இதில் நல்ல வருமானம் கிடைத்ததால் தொடர்ந்து இதனை செய்து வந்தோம்.
இவ்வாறு ரபீக் வாக்கு மூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கள்ள நோட்டுகள் மற்றும் துப்பாக்கி, தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட ரபீக், சாகுல் இருவரும் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு சென்னையில் பலர் ரபீக்குக்கு உதவிகள் செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவர், ரபீக்கிடம் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கினார். அப்போது கைது செய்யப்பட்டு சலீம் சிறையில் அடைக்கப்பட்டார். இவரை போல யார்–யார் சென்னையில் பதுங்கி இருக்கிறார்கள் என்பது பற்றியும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
எனவே ரபீக், சாகுல் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் இவர்களுக்கு உதவி செய்தவர்களின் பட்டியலையும் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே கள்ள நோட்டு கடத்தல் வழக்கில் விரைவில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ள நோட்டுகளுடன் துப்பாக்கி தோட்டாக்களையும் சாகுல் கடத்தி வந்திருப்பது போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் இருந்து ரபீக்குக்காக துப்பாக்கியை கொடுத்து அனுப்பியவர் யார்? எதற்காக ரபீக் துப்பாக்கியை வாங்கியுள்ளார் என்பதும் மர்ம மாக உள்ளது. இதன் பின்னணி பற்றியும் சி.பி.சி.ஐ. அதிகாரிகள் விரிவாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுதவிர, செல்வராஜ், அசோக்குமார் உள்பட மேலும் 12 கள்ள நோட்டு புரோக்கர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment