Thursday 5 June 2014

ஹாட் நியூஸ் (05-06-2014)


ஹாட் நியூஸ் (05-06-2014) மாலை, IST- 03.00 மணி,நிலவரப்படி

 திருப்பதியில் பினாமிகள் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்த கரகாட்டக்காரி


வேலூர், ஜூன்.5–
வேலூர் வசந்தபுரம் இந்திரா நகரை சேர்ந்த கரகாட்டக்காரி மோகனாம்பாளின் காட்பாடி வீட்டில் ரூ.4 கோடி பணம் மற்றும் 73 பவுன் நகைகளை போலீசார் மே 25–ந் தேதி பறிமுதல் செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மோகனாம்பாள், அவரது அக்கா நிர்மலா, அவரது மகன் சரவணன் மற்றும் உறவினர்களை தேடி தனிப்படை போலீசார் ஊர், ஊராக அலைந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், மோகனாம்பாள் கோட்டீஸ்வரி ஆனது எப்படி என்பது உள்ளிட்ட பல விவரங்களை தனிப்படை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதில் தினமும் புதுப்புது தகவல்கள் கிடைத்து வருகிறது.
செம்மரக்கடத்தல் மூலமாக பல கோடிகளுக்கு அதிபதியான மோகனாம்பாளுடன் பல முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு இருந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே, அணைக்கட்டு தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாபுவை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதில் கிடைத்த தகவல்களின்படி, காட்பாடியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் மற்றும் அவரது கூட்டாளிகளை தனிப்படை போலீசார் பிடிக்க சென்றபோது, அவரும் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
செம்மரக் கடத்தலுக்காக ஆந்திர மாநிலம் பலமனேருக்கு சென்றபோது, கூட்டாளி ஒருவருடன் ஏற்பட்ட மோதலில், கொலை வழக்கிலும் சரவணன் 2008ல் சிக்கியுள்ளான். அதேபோல், கடந்த ஆண்டு திருப்பதிக்கு மரம் வெட்டி கடத்திச் சென்ற போது, அதை தடுக்க வந்த போலீசாருடன் ஏற்பட்ட மோதலில், திருப்பதி போலீசாரை அடித்து கொலை செய்த வழக்கிலும் சரவணன் ஈடுபட்டதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையறிந்த வேலூர் தனிப்படை போலீசார் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
செம்மரக் கடத்தல் கூட்டாளிகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த மோகனாம்பாள், தன்னுடைய வருமானத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்களை தனது செல்வாக்கு மூலம், அவ்வப்போது போலீஸ் வசம் சிக்கவும் வைத்துள்ளார்.
இதனால் பலருடன் நெருக்கமான வியாபார தொடர்பில் இருந்த மோகனாம்பாள், ஒருகட்டத்தில் தனித்து விடப்பட்டார். ஆனாலும், இதை பற்றி எல்லாம் கவலைப்படாத மோகனாம்பாள், தன்னுடைய அக்கா மகன் சரவணனை உடன் வைத்துக் கொண்டு கடந்த ஒரு ஆண்டாக செம்மர வியாபாரத்தை துணிச்சலாக நடத்தி வந்துள்ளார்.
மேலும், மோகனாம்பாளின் உபசரிப்பு, கவனிப்பு, வாக்குறுதி, தொழிலில் நேர்மை உள்ளிட்ட பல காரணங்களால் வெளி மாநில வாடிக்கையாளர்கள் இவரிடமே தொடர்ந்து வியாபாரத்தை வளர்த்து வந்தனர்.
இதனால் மோகனாம்பாள் காட்டில் பண மழை கொட்டியது. செய்வது சமூகவிரோத செயல்கள், அந்த தொழிலில் நண்பர்களை காட்டிலும் எதிரிகளை நிறைய சம்பாதித்து விட்டோம், எனவே எந்த நேரத்திலும் நமக்கு ஆபத்து வரலாம் என அடிக்கடி சரவணனிடம் மோகனாம்பாள் கூறி வந்துள்ளார். சம்பாதித்த பணத்தை எப்படி காப்பாற்றுவது என யோசிக்க வேண்டும் என சரவணனிடம் பேசியுள்ளார்.
இதையடுத்து சரவணன் கொடுத்த யோசனையின்படி, வேலூர் வசந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை தன்னுடைய பினாமியாக வைத்துக் கொண்டார் மோகனாம்பாள்.
இதேபோல், 15க்கும் அதிகமான உறவினர்ளை பினாமியாக கொண்டு செயல்பட்டு வந்துள்ளார். ஒவ்வொரு பினாமி பெயரிலும் மோகனாம்பாள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.
மோகனாம்பாளின் பினாமியாக செயல்பட்ட வசந்தபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் மகன்கள், 2 பேர் தான், மோகனாம்பாளின் முன்ஜாமீனுக்காக வக்கீல்களை ஏற்பாடு செய்து, சென்னை ஐ கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், செம்மரக் கடத்தல் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தில் பினாமி பெயரில் மோகனாம்பாள், அவரது அக்கா நிர்மலா, மகன் சரவணன் ஆகியோர் வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் பலமனேர், திருப்பதி, சித்தூர் ஆகிய பகுதிகளில் 52 ஏக்கர் வரை நிலம் மற்றும் வீடுகளை வாங்கி குவித்துள்ளதும், வேலூரில் 30க்கும் அதிகமான வீடுகளை வாங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
அதேபோல், மோகனாம்பாளிடம் சொத்தின் பேரில் கடன் வாங்கி, அதை இழந்தவர்களின் பட்டியலையும் தனிப்படை போலீசார் சேகரித்து வருகின்றனர். அவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கோடிகளில் புரண்ட மோகனாம்பாள், தான் சேர்த்த பணத்தை எதிர்காலத்தில் காப்பாற்றிக் கொள்ள, எழுத படிக்க தெரியாத, தனக்கு நெருக்கமான உறவினர்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி, அதில் பல லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்து வைத்துள்ளதாகவும், ஒரு சில வங்கிகளில் லாக்கர் வசதிகளை ஏற்படுத்திக் அதில் முக்கிய பத்திரங்கள், நகைகள், பணம் ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பதாகவும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, மோகனாம்பாளின் பினாமிகள் பெயரில் உள்ள வங்கி லாக்கர்களில் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சித்தூரில் மோகனாம்பாள் பதுங்கியுள்ளதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சித்தூரில் தனிப்படை போலீசார் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment